திருச்செந்தூரில் ‘அரோகரா’ முழக்கம் அதிர மாசித் தேரோட்டம்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும், உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், நடப்பாண்டு (2026) மாசிப் பெருந்திருவிழா கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வந்தனர். இந்தப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தேரோட்டம் பத்தாம் திருவிழாவான இன்று (மார்ச் 2, 2026) அதிகாலை முதலே பக்தி பரவசத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை 5.00 மணிக்குத் திருக்கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் செவ்வனே நடந்தேறின.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தேரோட்டத்தை மாலை முரசு நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்துத் தொடங்கி வைத்தார். முதலில் விநாயகர் தேர் நிலையில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து நிலை சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து காலை 7.50 மணிக்குச் சுவாமி தேர் நிலையில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலை சேர்ந்தது. இறுதியாக அம்பாள் தேர் புறப்பட்டு ரத வீதிகள் வழியாக உலா வந்து நிலையை அடைந்தது. தேரோட்டத்தின் போது திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’, ‘வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என விண்ணதிரும் முழக்கமிட்டுப் பக்திப் பெருக்கோடு வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த மகோன்னத நிகழ்வில் கோவில் இணை ஆணையர் ராமு, மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி, மாவட்ட நீதிபதி வசித்குமார், சார்பு நீதிபதி தினேஷ் குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் சிதம்பரம், திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் செங்குளி ரமேஷ், ஏரல் சேர்மன், திருக்கோவில் தக்கார் கருதபாண்டி நாடார் மற்றும் மாநில இந்து முன்னணி துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றுச் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் தொடர்ச்சியாக, பதினொன்றாம் திருவிழாவான நாளை (மார்ச் 3) இரவு 10.30 மணிக்கு, சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து மேலக்கோவில் சேரும் கண்கவர் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. பன்னிரண்டாம் திருவிழாவான மார்ச் 4-ஆம் தேதி புதன்கிழமை, மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் சுவாமி வலம் வருகிறார். அன்று இரவு 9.00 மணிக்குச் சுவாமி மற்றும் அம்பாள் மலர் கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேருதலுடன் இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது. விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைத் திருக்கோவில் தக்கார் இரா.அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Exit mobile version