விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலான பொதுக்கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.
என்ன நடந்தது?
செஞ்சி கோட்டை சமீபத்தில் யுனெஸ்கோவால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, கோட்டை தமிழர்களின் பாரம்பரியச் சின்னமே தவிர மராட்டிய மன்னருக்கு சம்பந்தமில்லை எனக் கூறி பல்வேறு தரப்பினர் போராட்டங்களையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று சீமான் தலைமையில் “கோனேரிக்கோனுக்கு சொந்தமான கோட்டை” என்ற கருத்தரங்கு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் செய்திகளை சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள், பாதுகாப்பு பணியாளர்களால் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி கேட்டபோது, பவுன்சர்கள் தகாத வார்த்தைகளில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு சூழல் பதற்றமாகியது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் இடத்தை விட்டு வெளியேற முயன்றனர். அப்போது, மேடையில் இருந்த சீமான் திடீரென கீழிறங்கி, அடிக்கப்போவது போல பத்திரிக்கையாளர்களை நோக்கிச் சென்றார். இந்த ஆவேசம் அங்கு பரபரப்பை மேலும் தீவிரப்படுத்தியது.
உடனடியாக செஞ்சி காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து, செய்தியாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள். பிரச்சினையை சமரசம் செய்து தீர்க்காமல், தாக்க முயற்சிப்பது போல் ஆவேசமாக நடந்துகொண்ட சீமானின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.