“உனக்கு மட்டும் கொம்பு முளைச்சிருக்கா ?” – செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலை…!

சென்னை: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, செய்தியாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சென்னையில் நடைபெற்ற பாஜக சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் இணை அமைப்பாளர் கூட்டத்தில், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் அண்ணாமலை வருகை தந்தபோது, செய்தியாளர் ஒருவர் மைக் நீட்டியுள்ளார்.

அப்போது சிறிது பதட்டத்துடன் இருந்த அண்ணாமலை, “நான் எப்போது பேச வேண்டுமோ, அப்போது மட்டுமே பேசுவேன்” என்று கூறியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கூட்ட அரங்கிற்குள் இருந்த அந்த செய்தியாளரை அழைத்த அண்ணாமலை, கடும் சுருக்கத்துடன் பேசினார்.

“தமிழ்நாட்டிலுள்ள மற்ற மீடியாவுடன் 4–5 ஆண்டுகளாக நெருக்கமாக பணியாற்றி வருகிறேன். நீங்கள் புதிதாக வந்து சீன் போட வேண்டிய அவசியம் இல்லை. மரியாதை கொடுத்து மரியாதை வாங்குங்கள். நான் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்கிறேனா? எனக்காக நீங்கள் சம்பளம் கொடுக்கிறீர்களா? உங்களுக்கு மாதச் சம்பளம் கொடுக்கிறார்கள்… அதற்காக மிரட்டும் மாதிரி நடந்து கொள்ள வேண்டியதில்லை,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், அண்ணாமலை அந்த செய்தியாளரின் தோளில் கை வைத்து தட்டியதும், “உங்கள் நிறுவனத்திற்கே மட்டும் கொம்பு முளைச்சிருக்கா?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

அதன்பின், “நான் உங்களை மிரட்டவில்லை; நீங்கள் தான் என்னை மிரட்டுகிறீர்கள் போல தெரிகிறது. இனி உங்கள் நிறுவனத்திற்குப் பேட்டி கொடுக்க மாட்டேன்,” என்று கூறி அங்கிருந்து நகர்ந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு, பல்வேறு எதிர்வினைகளையும் கிளப்பியுள்ளது.

Exit mobile version