சென்னை :
“காவல் நிலைய கழிவறையில் குற்றவாளிகள் மட்டும்தான் வழுக்கி விழும் வகையில் உள்ளதா?” என்று சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த இப்ராஹிம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது மகன் ஜாகிர் உசேனுக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்தது.
அதில், மனுதாரரின் மகன் காவல் நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததாகவும், அவருக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், “இது போல வழுக்கி விழும் சம்பவங்கள் ஏன் குற்றவாளிகளுக்கே நடக்கின்றன? காவல் நிலைய கழிவறைகளை போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்துகிறார்களா? அவர்கள் ஏன் விழவில்லை? இவை அனைத்தும் சந்தேகம் எழுப்பும் விஷயங்கள். இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும்,” எனக் கடுமையாக எச்சரித்தனர்.
இதேவேளை, மனுதாரரின் மகனுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கச் சிறைத்துறைக்கு உத்தரவிடப்பட்டு, வழக்கு முடிக்கப்பட்டது.
















