சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் கலந்து கொண்ட கட்சித் தலைவர் திருமாவளவன், மத்திய அரசையும் இந்திய தேர்தல் ஆணையத்தையும் கடுமையாக விமர்சித்தார்.
தேர்தல் ஆணையம் செயல்படுவதில் அரசியல் தலையீடு உள்ளதாக குற்றம் சாட்டிய அவர், “அரசு அதிகாரிகள் சட்டப்படி செயல்பட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும் அளவுக்கு, பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேர்மையானவர்களா?” என கேள்வி எழுப்பினார்.
“மோடி, அமித்ஷா விருப்பப்படி தேர்தல் ஆணையம் இயங்குகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழும்போது, அவர்கள் எந்தவித தாக்கமும் செலுத்தாமல் இருப்பார்களா? இன்றைக்கு தேர்தல் ஆணையமும் பாஜகவும் ஒரே நோக்கத்துடன் செயல்படுபவர்கள் போல தோன்றுகிறார்கள்.”
“இது சாதாரண வாக்காளர் பட்டியல் திருத்தம் அல்ல. இந்தியாவில் குடியேறியவர்களை வாக்காளர்களாகத் தடுக்கவோ, போலி பெயர்களை நீக்கவோ செய்யப்படுவது அல்ல.” “பாஜக, நாடு முழுவதும் ‘தேசிய குடிமக்கள் பேரேடு’ (NRC) செயல்படுத்தத் திட்டமிட்டு இருக்கிறது. அம்பேத்கர் பார்வையிலான இந்தியாவை மாற்றி, ஒரே மதம்–ஒரே மொழி–ஒரே கலாச்சாரம் கொண்ட இந்தியாவை உருவாக்கும் முயற்சி இது.” “திராவிட இயக்கம், இடதுசாரி, அம்பேத்கரிய, பெரியாரிய அரசியல் ஆகியவை பன்மைத்துவத்தை காக்கும் குரல்கள். இவற்றை பலவீனப்படுத்த வேண்டும் என்ற அரசியல் நோக்கமே பாஜக தலைமையின் பின்னணியில் உள்ளது.”
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், திருமாவளவன் தேர்தல் ஆணையத்துக்கு தீவிர திருத்த நடவடிக்கையை (SIR) உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும்,
“வழக்கமான சம்மரி ரிவிஷன் முறையையே பின்பற்றுங்கள்; அரசியல் சதி முயற்சிகளை கைவிடுங்கள்” என்றும் வலியுறுத்தினார்.
கால அவகாசமின்மையால் மக்கள் போராட்டம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
