கோவை மாநகரின் தெற்குப் பகுதியான குறிச்சி மற்றும் போத்தனூர் வட்டாரத்தில் மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ‘அரவான் திருவிழா’ பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மிக எழுச்சியாக நடைபெற்றது. மகாபாரதப் போரை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்தத் திருவிழா, கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி ‘எல்லை கட்டுதல்’ மற்றும் அரவான் சுவாமிக்கு ‘உயிர் பிடித்தல்’ ஆகிய பாரம்பரியச் சடங்குகளுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பத்து நாட்களாகப் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான அரவான் திருவீதி உலா மற்றும் களப்பலி சடங்குகள் நேற்று அரங்கேறின.
நேற்று அதிகாலை முதலே குறிச்சி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை சிறப்புச் சீர்முறை வழிபாடுகள் முடிந்தவுடன், பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட அரவான் சுவாமியின் திருவீதி உலா தொடங்கியது. மேளதாளங்கள் முழங்க, மக்கள் வெள்ளத்திற்கு நடுவே நடைபெற்ற ‘அரவான் ஆட்டம்’ கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. இந்த ஊர்வலம் ரவுண்டு ரோடு, பொள்ளாச்சி சாலை, பெருமாள் கோவில், முருகா நகர் மற்றும் சுந்தராபுரம் ஆகிய முக்கியப் பகுதிகள் வழியாகச் சென்றது. ஊர்வலத்தின் போது ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்குரிய பாரம்பரிய முறையின்படி அரவானுக்குச் சிறப்புப் பூஜைகளைச் செய்து வழிபட்டனர்.
திருவீதி உலாவின் இறுதியில் அரவான் மீண்டும் பெருமாள் கோவிலைச் சென்றடைந்தார். அங்கு தர்மத்தை நிலைநாட்டத் தன்னைத் தியாகம் செய்ய முன்வந்த அரவானுக்கு, கிருஷ்ண பரமாத்மா மாலை அணிவித்து கௌரவிக்கும் உருக்கமான நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மகாபாரதக் கதையின்படி களப்பலி கொடுக்கும் சடங்கிற்காக அரவான் களப்பலி மேடைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆகம விதிகளின்படி, களப்பலி நிகழ்வின் போது வெளியூர் நபர்கள் அனைவரும் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின், மிகுந்த ரகசியத்தன்மையுடன் புனிதச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.
இந்தத் திருவிழாவை முன்னிட்டுச் சுந்தராபுரம் மற்றும் குறிச்சி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், போத்தனூர் மற்றும் சாரதா மில் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்காகப் போக்குவரத்து காவல்துறையினர் அவ்வப்போது வாகன மாற்றங்களைச் செய்திருந்தனர். கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள், அரவானின் தியாகத்தைப் போற்றும் வகையில் வழிபாடு நடத்தித் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
















