சென்னை : தமிழக அரசு, சீனியாரிட்டி பட்டியல் தயாரிப்பதை தாமதப்படுத்தி, வேண்டுமென்றே பொறுப்பு டிஜிபி நியமனம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக போலீசார், அரசியல் வட்டாரங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
தமிழக போலீஸ் சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதையடுத்து, புதிய டிஜிபி நியமிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. விதிமுறைகளின்படி, 6 மாதங்களுக்கு முன்னரே சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு கடைசி நேரத்தில் மட்டுமே பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
தயாரிக்கப்பட்ட பட்டியலில் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை டிஜிபி சீமா அகர்வால், ஆவின் விஜிலென்ஸ் டிஜிபி ராஜிவ் குமார், போலீஸ் அகாடமி இயக்குனர் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோட் உட்பட 11 அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. எனினும், தேர்வு நடைமுறைகள் நிறைவடையாத நிலையில், நிர்வாக பிரிவு டிஜிபியாக பணியாற்றிய வெங்கட்ராமன், பொறுப்பு டிஜிபியாக அரசு உத்தரவிட்டது. அவர் சீனியாரிட்டி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட்ராமன் பதவியேற்ற நிகழ்வில், அவரைவிட சீனியாரிட்டியில் முன்னிலையில் இருந்த 8 டிஜிபி அந்தஸ்து அதிகாரிகள் பங்கேற்காமல் தவிர்த்தனர். இது காவல்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“சரியான நேரத்தில் பட்டியல் அனுப்பப்பட்டிருந்தால், தகுதியான அதிகாரி டிஜிபியாக நியமிக்கப்பட்டிருப்பார். ஆனால் தேர்தல் சூழலில் தங்களுக்கு சாதகமானவர் இருக்க வேண்டும் என்பதற்காகவே அரசு குளறுபடி செய்துவிட்டது,” என அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அண்ணாமலை கண்டனம்
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறுகையில்,
“சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற உடனே, பதவி மூப்பில் முதல் 3 இடத்தில் உள்ளவர்களில் ஒருவரை டிஜிபியாக நியமிக்க வேண்டும். ஆனால், 9வது இடத்தில் உள்ள அதிகாரியை நியமித்துள்ளனர். இது காவல்துறையின் இயங்குதிறனை பாதிக்கும். மேலும், பதவியேற்பு நிகழ்வில் முதல் 8 அதிகாரிகள் பங்கேற்காமல் தவிர்த்தது மிகப்பெரிய தவறு. இதுபோன்றது இதற்கு முன்பு ஒருபோதும் நடைபெறவில்லை,” என்றார்.
