தரங்கம்பாடி  நண்டலாறு சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை மாவட்டம் எல்லைப் பகுதியான தரங்கம்பாடி அருகே, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் அமைந்துள்ளது. இரண்டு மாநிலங்களின் எல்லையாக பூவம் ஆற்றின் கரையோரம் மயிலாடுதுறை மாவட்ட நண்டலாறு காவல் சோதனை சாவடி அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சோதனை சாவடி வழியே சென்று வரும் நிலையில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவர்மன், இன்ஸ்பெக்டர் அருள்பிரியா ஆகியோர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறை குழுவினர் நடத்திய சோதனையில் ரூபாய் 10 ஆயிரத்து 160 ரூபாய் அங்கிருந்த மூன்று போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்தது கண்டறியப்பட்டது. கூடுதலாக இருந்த பணம் குறித்து காவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்தனர். திடீர் சோதனை என்பதால் நடவடிக்கை எதுவும் இல்லை என்றும் கூடுதல் பணம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

Exit mobile version