தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் ஒருமித்த ஆதரவு வழங்க வேண்டும் எனவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் சாக்குபோக்கு சொல்லாமல் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
“மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர் உறுதியாக வெற்றி பெற்று அந்த பதவிக்கு பெருமை சேர்ப்பார் என நம்புகிறோம். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, அவரை வெற்றி பெறச் செய்வது அவசியம்.
முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி ஒரு நல்ல வேட்பாளர் தான். அதேசமயம், சி.பி. ராதாகிருஷ்ணன் நல்ல மனிதர் என்று எதிர்க்கட்சியினரும், ஜார்க்கண்ட் மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ளவர்கள் கூட பாராட்டுகின்றனர். இண்டி கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதை மறுபரிசீலனை செய்ய முதல்வர் ஸ்டாலினுக்கு இன்னும் நேரம் உள்ளது. அரசியல் கோணத்தில் அல்லாது, ஒரு தமிழருக்கு நாம் ஆதரவளித்தோம் என்ற பெருமையை மக்கள் முன்னிலையில் வைக்க திமுகவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளிடமிருந்தும் ஒருமித்த ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் அனைவரிடமும் அன்பும், நட்பும் காட்டியவர். துணை ஜனாதிபதியாக அவர் வருவது தமிழருக்கும், ஆர்எஸ்எஸுக்கும் பெருமை.
இதேவேளை, பார்லிமென்டில் இன்று புதிய மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி பிரதமர், கேபினட் அமைச்சர்கள், முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டால், 31 நாட்கள் சிறையில் இருந்த பின் தானாகவே பதவி நீக்கம் செய்யப்படுவர். இது வரவேற்கத்தக்க சட்டம்.
விஜய் தனது மாநாட்டை நடத்தட்டும். மாநாடு நடத்துவது எல்லோருக்கும் உரிமை. அவர்கள் ஆக்ரோஷமாகச் செல்ல நினைத்தால் செல்லட்டும். ஆனால் மக்கள் எங்கள் சித்தாந்தம், கொள்கைகளில் அதிக நம்பிக்கை வைக்கிறார்கள்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றி, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் நாள் தூரத்தில் இல்லை என்று மக்கள் பேச தொடங்கியுள்ளனர். எனவே விஜய்க்கும் அவரது மாநாட்டுக்கும் வாழ்த்துகள்.”
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.














