தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைச் சுட்டிக்காட்டி தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பு என்பது ஏற்கனவே நிறைவேற்றப்படாத பழைய வாக்குறுதிகளை மறைப்பதற்காக வெளியிடப்பட்ட மற்றுமொரு “ஏமாற்று அறிவிப்பு” என்று அவர் தனது பதிவில் சாடியுள்ளார். ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு அரசு மக்களைத் தொடர்ந்து திசைதிருப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணாமலை தனது பதிவில், “கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் வகையில், மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைக் கேட்டுத் தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கப் போகிறார்கள் என்று அனைவரும் நம்பினர். ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் முடியப்போகும் நிலையில், இதுவரை ஒரு ரூபாய் கூட ஊக்கத்தொகையாகக் காளை வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏற்கனவே சொன்னதைச் செய்யாமல், இப்போது மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை என்பதும் வெற்று வாக்குறுதிதான்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் 60,000 ரூபாய் ஊக்கத்தொகை எப்போது வரும் என்று தெரியாமல் அவர்கள் காத்திருப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். திமுகவின் இத்தகைய செயல்பாடுகளை விவரிக்க, “பேரு பெத்த பேரு, தாக நீலு லேது” (பெயர் என்னவோ பெரிய பெயர்தான், ஆனால் குடிக்கத் தண்ணீர் இல்லை) என்ற தெலுங்குப் பழமொழியை மேற்கோள் காட்டிய அவர், இது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முழுமையாகப் பொருந்தும் என்று கிண்டல் செய்துள்ளார். ஜல்லிக்கட்டு வீரர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு, ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.













