சென்னை: தென்கொரியாவைச் சேர்ந்த வாசவுங் பன்னாட்டு நிறுவனத்தின் ரூ.1720 கோடி முதலீடும், அதன்மூலம் உருவாக இருந்த 20,000 நேரடி வேலைவாய்ப்பும் தமிழகத்திற்கு பதிலாக ஆந்திரப்பிரதேசத்துக்குச் செல்லும் நிலையில், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
தென் கொரிய நிறுவனமான வாசவுங், தமிழகத்தில் பெரிய அளவில் காலணி உற்பத்தி நிலையம் அமைக்கத் திட்டமிட்டிருந்ததாக தொழில் துறை அமைச்சர் முன்பு அறிவித்திருந்தார். எனினும், மூன்று மாதங்களுக்குள் அந்த முதலீட்டை ஆந்திர மாநிலத்துக்குத் மாற்ற நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழக நிர்வாக அலட்சியத்தின் விளைவு” – அண்ணாமலை குற்றச்சாட்டு
முதல்வர் ஸ்டாலினும் தொழில் துறை அமைச்சரும் “ஆழ்ந்த உறக்கத்தில்” உள்ளதாக விமர்சித்த அண்ணாமலை, முதலீட்டாளர்கள் பற்றிய அரசின் அறிவிப்புகள் பெயருக்கு மட்டுமே தொடர்கின்றன என்றும், செயலில் பிற மாநிலங்கள் வேகமாக முன்னேறிவிட்டன என்றும் குற்றஞ்சாட்டினார்.
“ஒருகாலத்தில் வாய்ப்புகளின் நிலமாக இருந்த தமிழகம், தவறவிட்ட வாய்ப்புகளின் நிலமாக மாறியுள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், நிர்வாகத்தில் நம்பிக்கை இல்லாத சூழலில் சர்வதேச நிறுவனங்கள் தமிழகத்தைத் தவிர்க்கின்றன என்றும் கூறினார்.
“ஷோ-ஆப் ஆட்சியின் விளைவு இது” – இபிஎஸ் விமர்சனம்
வாசவுங் நிறுவனம் தமிழகத்திலிருந்து விலகியதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, “நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுப்பயணம், முதலீட்டாளர் மாநாடுகள் என நிகழ்ச்சிகளே நடந்தது; ஆனால் பயன் இல்லை” என்றார்.
பெண்கள் பாதுகாப்பு குறைவு, சட்டம்-ஒழுங்கு சரிவு, ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட காரணங்களால் நிறுவனங்கள் பின்வாங்குகின்றன என்றும் அவர் கூறினார்.
“விளம்பர நிகழ்ச்சிகளால் மட்டும் தொழில்கள் வராது. 2026ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் விலகிச் சென்ற நிறுவனங்கள் மீண்டும் தமிழகத்தை தேடி வரும்,” என இபிஎஸ் உறுதிப்படுத்தினார்.

















