குடும்ப ஆதிக்கமற்ற தலைவர் அண்ணாதுரை : திமுகவை மீண்டும் கடுப்பேற்றிய விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை, திமுக வட்டாரங்களில் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாதுரை குறித்து விஜய் தனது அறிக்கையில், “மாநில உரிமைக்காக வலியுறுத்தியவர்; இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தியவர்; ‘தமிழ்நாடு’ என்று சட்டப்படி பெயர் மாற்றியவர்; சமூக நீதியை கொள்கையாகக் கொண்டவர்; சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கியவர்” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “குடும்ப ஆதிக்கம் இன்றிய அரசியல் தலைவர்; இரட்டை வேடம் போடாமல் மக்களுக்காக உழைத்தவர் அண்ணாதுரை. தேர்தல் அரசியலில் அசாத்திய வியூகத்தை வகுத்து, தமிழகத்தில் மாபெரும் ஆட்சிமாற்றத்திற்கு வழிவகுத்தவர்” என்றும் விஜய் பாராட்டினார்.

அத்துடன், அண்ணாதுரையின் “மக்களிடம் செல்” என்ற அரசியல் மந்திரத்தை பின்பற்றி, மக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவோம் என உறுதியளித்தார்.

இதற்கு முன்னர், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட கடிதத்தை விமர்சித்து, திமுகவுக்கு எதிராக விஜய் வெளியிட்ட கடும் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அண்ணாதுரை குறித்து விஜய் வெளியிட்ட பாராட்டு அறிக்கை, திமுக வட்டாரங்களில் புதிய அதிருப்தியை கிளப்பியுள்ளது.

Exit mobile version