கன்னியாகுமரி: தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பக்தர்களுக்கு வழங்க ஒரு லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
சுசீந்திரம் கோயிலில் அமைந்துள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உலகப்புகழ் பெற்றது. ஆண்டுதோறும் மார்கழி மாத அமாவாசையுடன் கூடி வரும் மூல நட்சத்திரத்தன்று அனுமன் அவதரித்த தினமாக ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆஞ்சநேயரை வழிபட்டால் தீராத வினைகள் தீர்ந்து, ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். காலை 8 மணி முதல் 18 அடி உயர ஆஞ்சநேயருக்குப் பிரம்மாண்டமான ஷோடச அபிஷேகம் தொடங்குகிறது. இதில்:
மஞ்சள் பொடி, நெய், இளநீர், நல்லெண்ணெய், திரவியப்பொடி, பன்னீர், தேன், பால்.அரிசி மாவுப்பொடி, விபூதி, தயிர், எலுமிச்சை சாறு, குங்குமம், சந்தனம், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம். ஆகிய 16 வகையான புனிதப் பொருட்களைக் கொண்டு ஆஞ்சநேயருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து கண்கவர் புஷ்பாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த விழாவில் கலந்துகொள்ளக் குமரி மாவட்டம் மட்டுமின்றி, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தரிசனத்திற்கு வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கக் கோயில் நிர்வாகம் சார்பில் 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை முதலே கோயிலில் விசேஷ பூஜைகள் தொடங்குகின்றன. பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் வரிசைகள், குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
