பாமகவில் தந்தை-மகன் இடையேயான மோதல் உச்சிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அன்புமணி நேற்று திடீரென தைலாபுரம் சென்றது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஆகஸ்ட் 17ஆம் தேதி தனது தலைமையில் பொதுக்குழுவை நடத்துவதாக அறிவித்திருந்தார். இதற்கு போட்டியாக, அன்புமணி தலைமையிலும் தனியே பொதுக்குழு நடைபெற்றது. கடந்த 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த அன்புமணியின் பொதுக்குழுவில், அவர் மேலும் ஒரு ஆண்டுக்கு பாமக தலைவராக நீடிப்பார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ் தரப்பு, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி, அன்புமணியின் பொதுக்குழு செல்லாது என்றும், தமக்கு தாமே நிர்வாகத் தலைவராக அறிவித்தது சட்ட ரீதியாக தவறு என்றும் வலியுறுத்தியது. இதேவேளை, 17ஆம் தேதி நடைபெறவுள்ள ராமதாஸின் பொதுக்குழு சட்ட ரீதியாக செல்லாது என அன்புமணியின் ஆதரவாளரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான பாலு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு அன்புமணி திடீரென சென்றார். அப்போது, பாமக நிறுவனரின் மனைவியும், தனது தாயாருமான சரஸ்வதியின் பிறந்த நாளையொட்டி, மனைவி சவுமியா, மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் அன்புமணி சென்று ஆசி பெற்றார்.
இவ்விழாவில், அன்புமணி – ராமதாஸ் இடையே நேரடி உரையாடல் நடந்ததாகவும், இருவரும் சமாதான முயற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்டநாளாக தொடர்ந்துவரும் தந்தை-மகன் கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு அமையுமா என்பது தற்போது பாமக தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

















