கேரளா மாநிலம் இந்தியாவில் வறுமையை முற்றிலும் ஒழித்த முதல் மாநிலமாக உருவெடுக்கவுள்ளதாக பாராட்டிய பாமக தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ், தமிழ்நாட்டிலும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது :
“கேரள மாநிலம், வறுமையில் வாடிய 64,006 குடும்பங்களை அடையாளம் காண்ந்து, அவர்களுக்கு வீடுகள், வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கியுள்ளது. இதன் மூலம் வரும் நவம்பர் 1-ஆம் தேதி மாநில தினத்தன்று, ‘வறுமையை ஒழித்த முதல் மாநிலம்’ என்ற பெருமையை கேரளா பெறவிருக்கிறது. இதற்காக கேரள அரசுக்கு பாராட்டுகள்.”
அவர் மேலும் கூறியதாவது :
“இந்த சாதனைக்குப் பின்னால் இருந்த முக்கிய காரணம், கேரள அரசு நடத்திய துல்லியமான கணக்கெடுப்புதான். அதன் மூலம் வறுமையின் நிலைமைகள் மற்றும் காரணிகள் கண்டறியப்பட்டு, மைக்ரோ திட்டங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாட்டிலும் இதே போன்று கணக்கெடுப்பு நடத்தாமல், வெறும் விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளால் மட்டும் வறுமையை ஒழிக்க முடியாது.
தமிழ்நாட்டில் இன்று வரை வறுமையில் வாடும் குடும்பங்களின் சரியான புள்ளிவிவரமே இல்லை. இதற்கு காரணம், அரசு தரவுகளைத் திரட்ட எந்தவிதமான சமூக அல்லது பொருளாதார கணக்கெடுப்பையும் நடத்தாதது தான்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூக மற்றும் பொருளாதார சமநிலையைப் புரிந்துகொள்ள அவசியமான கருவி. இதை மேற்கொள்வது அரசு கடமை. ஆனால், தங்கள் ஆட்சியில் நிகழ்ந்த சமூக அநீதிகள் வெளிப்படும் என்ற அச்சத்தால் திமுக அரசு இதைத் தவிர்க்கிறது.
சமூகநீதி, வறுமை ஒழிப்பு போன்றவை வாய்மொழி அறிக்கைகளால் அல்ல, செயலால் நிரூபிக்கப்பட வேண்டியவை. ‘சீனி சர்க்கரை சித்தப்பா என்று ஏட்டில் எழுதினால் மட்டும் இனிக்காது’ என்ற பழமொழி போல, பெயரால் மட்டும் இனிமை வராது என்பதை திமுக அரசு உணர வேண்டும்.”
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
			















