ஆத்தூர் அருகே பாமக எம்.எல்.ஏ. அருள் மீது தாக்குதல் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அருள், “தாக்குதலுக்கு பாமக தலைவர் அன்புமணியே காரணம்” என குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய பாமக செயலாளர் சத்யராஜ் தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் அஞ்சலி செலுத்தச் சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரது காரை வழிமறித்து, கற்கள் எறிந்து, கட்டைகளால் தாக்கினர்.
தாக்குதலில் அருள் தரையில் தள்ளப்பட்டதாகவும், அவரது ஆதரவாளர்களும் எதிர்தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் சேலம் வந்த அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த தாக்குதல் குறித்து காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. அருள், “மருத்துவர் ராமதாசை அழைத்து சேலத்தில் பொதுக்குழு நடத்தியோம். அதன் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் நடந்தது. அன்புமணி உன்னைக் கொல்லச் சொல்லியதாக கூறி ஒருவன் கத்தியுடன் என்மீது வந்தான். தன் தந்தையையே எதிர்க்கும் மனநிலை கொண்டவர்; எனவே இப்படிச் செய்வதில் ஆச்சர்யமில்லை. நான் அஞ்சுவதில்லை. தமிழ்நாடு காவல் துறையை நம்புகிறேன். இந்தச் சம்பவத்தில் முதல் குற்றவாளி அன்புமணிதான்” என்று குற்றம்சாட்டினார்.
