தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மூத்த குடிமக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட புதிய “முதியோர் மனமகிழ் வள மையம் – அன்புச்சோலை” திட்டத்தை,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2025) திருச்சிராப்பள்ளியில் காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்த மையங்கள் மூலமாக, முதியவர்கள் உடல் மற்றும் மன நலத்தை பேணுவதோடு, சமூக உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் பல்நோக்கு சமூக பணி மையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டு,
“முதியோர்கள் சமூகத்தின் பெருமை. அவர்களுக்கு மனமகிழ்ச்சியும், உடல் நலனும் உறுதி செய்யும் பொறுப்பை அரசு ஏற்றுள்ளது,” எனக் கூறினார்.
நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர். செ. சரவணன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர். ஆர். சச்சிதானந்தம், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும், பழனி இடும்பன் நகர் மக்கள் உதவி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு, “அன்புச்சோலை மையங்கள் மூலமாக முதியோர் தனிமையிலிருந்து மீண்டு, மனநிறைவுடன் வாழ முடியும்,” என தெரிவித்தார். “அன்புச்சோலை” மையங்கள் தமிழ்நாடு முழுவதும் முதியோருக்கான சிறப்பு சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “முதியவர்கள் மனம் தளராமல், தன்னம்பிக்கையுடன் வாழ வழி வகை செய்வதும், குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதும்.” இந்நிகழ்ச்சியில் பல்நோக்கு சமூக பணி மைய இயக்குநர் எஸ். ஜான் நெப்போலியன், மக்கள் உதவி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இயக்குநர் முரளி, சமூக நல அலுவலர் காலின் செல்வராணி, பொது பிரதிநிதிகள் மற்றும் சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
