ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 10,000 கிலோமீட்டர் தூரம் பயணித்துத் தமிழகம் வந்த அரிய வகை ‘சிவப்பு மூக்கு ஆளான்’ பறவை, நாகப்பட்டினத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டுத் தற்போது வனத்துறையினரின் தீவிர சிகிச்சையில் உள்ளது.நாகப்பட்டினம் புதிய கடற்கரை ரயில்வே கேட் பகுதியில், விசித்திரமான தோற்றம் கொண்ட பறவை ஒன்று சிறகில் அடிபட்டுப் பறக்க முடியாமல் தரையில் கிடந்துள்ளது. அங்கிருந்த தெருநாய்கள் அந்தப் பறவையை வேட்டையாட முயன்றதைக் கண்ட கடற்கரை பொறுப்பாளர் தேவராஜ், உடனடியாக நாய்களை விரட்டிவிட்டுப் பறவையைப் பாதுகாப்பாக மீட்டார். பின்னர் இது குறித்து நாகை வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் சியாம்சுந்தர் உத்தரவின் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பறவையைப் பொறுப்பேற்றனர். வனத்துறையினர் நடத்திய முதற்கட்ட ஆய்வில் கிடைத்த ஆச்சரியமான தகவல்கள்: இந்தப் பறவை ஆஸ்திரேலியப் பகுதிகளில் அதிகம் காணப்படும் ‘சிவப்பு மூக்கு ஆளான்’ (Caspian Tern) இனத்தைச் சார்ந்தது. ஒரு அடி நீளமும், அரை கிலோ எடையும் கொண்டது. தற்போது கோடியக்கரையில் பறவைகள் சீசன் காலம் என்பதால், ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 10,000 கி.மீ தூரம் கடந்து கோடியக்கரைக்கு வந்துள்ளது.
நீண்ட தூரப் பயணத்தின் களைப்பு மற்றும் சிறகில் ஏற்பட்ட காயம் காரணமாகப் பறக்க முடியாமல் இந்தப் பறவை நாகை கடற்கரை அருகே விழுந்துள்ளது. தற்போது வனத்துறை அலுவலகத்தில் இந்தப் பறவைக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளும், உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. காயம் குணமாகிப் பறவை முழு ஆரோக்கியம் அடைந்தவுடன் மீண்டும் கோடியக்கரை சரணாலயப் பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்த அரிய விருந்தினரைச் சாதுர்யமாக மீட்ட பொதுமக்களுக்கும், உரிய நடவடிக்கை எடுத்த வனத்துறையினருக்கும் இயற்கை ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

















