ஆண்டவர் செவிலியர் கல்லூரியில் மதங்களைக் கடந்த ‘சமத்துவப் பொங்கல்’

தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி பகுதியில் அமைந்துள்ள ஆண்டவர் செவிலியர் கல்லூரியில் மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் ‘சமத்துவப் பொங்கல் விழா’ மிக விமரிசையாக நடைபெற்றது. சாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவை அனைவரும் இணைந்து கொண்டாடும் விதமாக இக்கல்லூரி வளாகம் ஒரு பாரம்பரிய கிராமமாகவே மாற்றப்பட்டிருந்தது. விழாவின் தொடக்கமாக, இஸ்லாமிய, கிறிஸ்துவ மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்த செவிலியர் பயிற்சி மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரே இடத்தில் மண்பானைகளில் பொங்கலிட்டுத் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழரின் உயர்ந்த தத்துவத்திற்குச் சான்றாக அமைந்தது.

பொங்கல் பானை பொங்கி வந்த வேளையில், தவில் மற்றும் நாதஸ்வர இசை முழங்க மாணவிகள் “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டது வளாகம் முழுவதும் அதிரச்செய்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. பொதுவாகச் செவிலியர் சீருடையில் காணப்படும் மாணவிகள், அன்று பாரம்பரிய உடையில் கிராமியக் கலைஞர்களாகவே மாறித் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நாதஸ்வர இசைக்கு ஏற்ப விறுவிறுப்பான குத்தாட்டம் ஆடியதுடன், மயிலாட்டம், கரகாட்டம் மற்றும் கோலாட்டம் உள்ளிட்டக் கலைகளை நயத்துடன் ஆடினர். குறிப்பாக, செவிலியர் மாணவிகள் ஆவேசத்துடன் ஆடிய புலியாட்டம் மற்றும் தாள கதியுடன் ஆடிய கும்மி நடனம் ஆகியவை விழாவின் உச்சக்கட்டமாக அமைந்தது.

மருத்துவப் பணியில் ஈடுபட உள்ள வருங்காலச் செவிலியர்கள், வெறும் பாடப்புத்தக அறிவோடு மட்டுமன்றி நமது மண்ணின் கலைகளையும், பண்பாட்டையும் போற்றிப் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுவது பாராட்டுக்குரியது எனப் பேராசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். கிராமியக் கலைகள் மறைந்து வரும் சூழலில், இளம் தலைமுறை மாணவிகள் புலியாட்டம் மற்றும் கரகாட்டம் போன்ற கலைகளைத் தாங்களாகவே முன்னின்று நடத்தியது பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இனிப்புப் பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டு, மதங்களைக் கடந்த மனிதாபிமான விழாவாக இந்தச் சமத்துவப் பொங்கல் இனிதே நிறைவு பெற்றது.

Exit mobile version