மயிலாடுதுறையில் விநியோகஸ்தராக இருந்த சிமெண்ட நிறுவனம் டெபாசிட் தொகையை திரும்பத் தராததால் வட்ட சட்டப்பணிகள் குழுவின் உதவியை நாடிய மூதாட்டி:- சமரச உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ரூ.64,198-க்கான காசோலையை நீதிபதி பெற்று வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த ஸ்ரீகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 72). இவர் சென்னை செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தில் 2007-ஆம் ஆண்டு முதல் விநியோகஸ்தராக இருந்தார். வயது முதிர்வு காரணமாக தொழிலை தொடர முடியாத ஈஸ்வரி 2021-ஆம் ஆண்டு விநியோக உரிமம் வேண்டாம் எனவும், டெபாசிட் தொகை ரூ.35,000 உள்ளிட்ட தனக்கு தரவேண்டிய தொகையினை திருப்ப அனுப்புமாறும் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால், செட்டிநாடு சிமெண்ட் நிர்வாகத்தினர் டெபாசிட் தொகையை திரும்ப அனுப்பாததுடன், எந்த பதிலும் அளிக்கவில்லை. இதுகுறித்து மயிலாடுதுறை வட்ட சட்டப் பணிகள் குழுவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஈஸ்வரி புகார் அளித்திருந்தார். இதையடுத்து வழக்கறிஞர் பாலமுருகவேல் மற்றும் வட்ட சட்டப் பணிக்குழுவினர் இருதரப்பினரையும் அழைத்து பேசியதில் சமரச உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஈஸ்வரிக்கு ரூ.64,198 வழங்க அந்நிறுவனம் முன்வந்தது. இதனை பெற்றுக்கொள்ள ஈஸ்வரி உடன்பட்டதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் முதன்மை சார்பு நீதிபதியுமான சுதா ரூ.64,198-க்கான காசோலையை ஈஸ்வரிக்கு வழங்கினார்.

















