திருச்சி அரசு மருத்துவமனையில் முற்றிய வாக்குவாதம்.. சட்டக் கல்லூரி மாணவி செய்த செயல்!

திருச்சி : திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்கேன் டெக்னீஷியனாக பணியாற்றி வரும் 44 வயதான வில்லியம், செவ்வாய்க்கிழமை தனது பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவி கிரிஜா தனது உறவினருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார்.

பலர் வரிசையில் காத்திருந்த நிலையில், கிரிஜா உடனே தனது உறவினருக்கு முன்னுரிமை வழங்குமாறு கேட்டார். இதற்காக வில்லியம் அவரை வரிசைப்படி காத்திருப்பது முக்கியம் எனக் கூறினார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்தது.

ஆத்திரம் அடைந்த கிரிஜா, வில்லியம்சை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு காலால் எட்டினார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரின் பேரில் கிரிஜா மீது பொது இடத்தில் ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன்னெடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்துக்கு பின் கிரிஜா தொடர்ந்து காவலர்களையும் மிரட்டியதாகவும் புகார்கள் இடம்பெற்றுள்ளன.

Exit mobile version