மக்கள்திரள் வரவேற்புக்கு இடையே பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணங்களை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்வையிட்ட கையோடு நேற்று (17.01.2026) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு வருகை தந்தார். அங்கு தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள தியாகி வே. இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் முறைப்படி திறந்து வைத்தார். முன்னதாக பரமக்குடி நகராட்சி எல்லையான தெளிச்சாத்தநல்லூர் பகுதிக்கு வருகை தந்த முதல்வருக்கு, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில், வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பரமக்குடி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் முதலமைச்சர் பயணித்த போது, சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்தும், மலர்களைத் தூவியும் வரவேற்றனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் வெள்ளத்தில் நனைந்தபடி, திறந்த வாகனத்தில் நின்றவாறு புன்னகையுடன் கைகளை அசைத்து மக்களின் வரவேற்பை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சந்தைக்கடை திடல் பகுதியில் அமைந்துள்ள மணிமண்டபத்தை அடைந்த அவர், அங்கு நிறுவப்பட்டுள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் முழு உருவச்சிலையைத் திறந்து வைத்து, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் பாடுபட்ட ஒரு மாபெரும் தியாகியின் நினைவைப் போற்றும் வகையில் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிமண்டபத்தைத் திறந்து வைத்த பின்னர், அதன் உள்ளே அமைக்கப்பட்டுள்ள நவீன அரங்கினை முதலமைச்சர் பார்வையிட்டார். அங்குள்ள எல்.இ.டி திரையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் வாழ்க்கை வரலாறு, சமூகப் போராட்டங்கள் மற்றும் அவரது தியாகங்களைப் பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த ஆவணக் குறும்படத்தைப் பார்வையிட்டார். தமிழக அரசு தியாகிகளின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு பகுதியாக இந்த மணிமண்டபமும், ஆவணப்படமும் அமையும் என அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்த மணிமண்டபம் 2023-ம் ஆண்டு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு, மிகக் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுத் தற்போது மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மணிமண்டபத் திறப்பு விழாவிற்குப் பிறகு, உலகநாதபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றார். அங்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த 100-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர், “மக்களுக்கான அரசிடம் மக்கள் காட்டும் அன்பு நெகிழ்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலை வழியாக மதுரை விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Exit mobile version