சென்னை :
அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து சிவில் வழக்கு தொடர அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதற்காக விதிகள் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து, ராம்குமார் ஆதித்தன் மற்றும் முன்னாள் எம்.பி கே.சி. பழனிச்சாமியின் மகன் சுரேன் ஆகியோர், “அதிமுக தொண்டர்கள் சார்பாக” உரிமையியல் வழக்கு தொடர அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், இருவருக்கும் வழக்கு தொடர அனுமதி அளித்திருந்தார். இதற்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் அமர்வு, “சுரேன் பழனிச்சாமி மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் அதிமுக உறுப்பினர்கள் அல்ல. அதனால் தொண்டர்கள் சார்பில் வழக்கு தொடர அனுமதி வழங்க முடியாது” என்று குறிப்பிட்டனர். மேலும், கட்சியில் இடைப்பட்ட காலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் எழுப்பிய கோரிக்கைகள் பொருந்தாது என்றும் தீர்ப்பளித்தனர்.
இதனால், முன்னதாக தனி நீதிபதி வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதிமுக விதி திருத்தத்தை எதிர்த்து தொண்டர்கள் சார்பாக வழக்கு தொடரும் அனுமதி இனி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

















