அதிமுக கூட்டத்தில் புகுந்த ஆம்புலன்ஸ் : இபிஎஸ் ஆவேசம்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், போளூர் தொகுதியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் புகுந்ததால், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) ஆவேசம் அடைந்தார்.

மக்களைச் சந்தித்து உரையாற்றிய இபிஎஸ்,

“பல கூட்டங்களில் நான் கவனித்து வருகிறேன். எங்கள் கூட்டங்களுக்கு இடையில் வேண்டுமென்றே ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. எத்தனை ஆம்புலன்ஸ் அனுப்பினாலும் எதுவும் செய்ய முடியாது. அரசியல் ரீதியாக எதிர்க்க தைரியம் இருந்தால் அதற்கே நேரில் வர வேண்டும். கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ் வந்தால் மக்களுக்கு ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வது? நோயாளி யாரும் இல்லாமல் வெறுமனே செல்கிறது. இதுபோன்ற சம்பவம் 30 கூட்டங்களில் நான் பார்த்துவிட்டேன். எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கும்போது பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசாரே இதுபற்றி கவனிக்கவில்லை. இதுகுறித்து நாளை போலீசாரிடம் முறையிடுவோம்,” என்றார்.

மேலும் அவர், “மக்களுக்கு தீங்கு செய்யும் ஆட்சியாகத்தான் திமுக ஆட்சி உள்ளது. அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்திய அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது திமுகவின் சாதனை. விவசாயிகளுக்கு பசுமை வீடுகள், ஆடு, மாடு, கோழி வழங்குதல், உழவர் பாதுகாப்பு திட்டம் என பல திட்டங்களை அதிமுக வழங்கியது. ஆனால் தேர்தல் வரும் போது நாடகம் ஆடும் கட்சிதான் திமுக. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் தருவோம் என அறிவித்து பின்னர் கைவிட்டனர். தூய்மைப் பணியாளர்களையும் புறக்கணித்துவிட்டனர். தேர்தல் வந்தால் அழகாகப் பேசுவார்கள்; ஆட்சிக்கு வந்ததும் அனைத்தையும் மறந்து விடுவார்கள். திமுக ஆட்சியில் போதைப்பொருள் பரவல் அதிகரித்துவிட்டது. இளைஞர்கள் சீரழியும் நிலை நிலவுகிறது. இதற்கெல்லாம் முடிவு காணப்போகிறது 2026 தேர்தலில்,” என்றார்.

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை நினைவுபடுத்திய அவர், “அணைக்கட்டு மற்றும் அகரம் பகுதிகளில் கலை அறிவியல் கல்லூரி, அணைக்கட்டு தாலுகா, அகரம் ஆற்றில் தடுப்பணை, ரயில்வே மேம்பாலம் என பல திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக மக்கள் கட்சி, மக்கள் அரசு. மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்பட்டு, மக்களைக் காக்கும். தமிழகத்தை மீட்டெடுப்போம். ஸ்டாலின் மாடல் அரசு அல்ல, பெயிலியர் மாடல் அரசுதான் இப்போது நடைமுறையில் உள்ளது,” என்று வலியுறுத்தினார்.

Exit mobile version