பரன்கா, பெரு – மனித நாகரிகத்தின் பண்டைய அடையாளங்களை அடுத்து மேலும் ஒரு முக்கியத் தகவல் வெளிவந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,970 அடி உயரத்தில், மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பழங்கால நகரம் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மண்ணும் கற்களும் பயன்படுத்தி கட்டப்பட்ட வீடுகள், கட்டிடங்கள் என அமைந்துள்ள இந்த நகரத்தின் ட்ரோன் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இது தொல்லியல் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தொல்லியல் தளம், பசிபிக் கடலோரம், அந்தீஸ் மலைத்தொடர்கள் மற்றும் அமேசான் காடுகள் ஆகியவற்றை இணைக்கும் பழைய வணிக பாதையின் ஒரு முக்கியக் கட்டமாக இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
பெனிகோ – பண்டைய வரலாற்றின் புதையல் !
பரன்கா மாகாணத்தில் உள்ள ‘பெனிகோ’ என்ற இந்த இடம், கி.மு. 1,800 – 1,500 காலப்பகுதிக்குரியதென கருதப்படுகிறது. இது, அமெரிக்காவின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான ‘Caral-Supe’ நாகரிகத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
கி.மு. 3,000 காலத்துக்கேச் சேர்ந்ததாகக் கருதப்படும் காரல் நாகரிகத்தில் 32க்கும் மேற்பட்ட மாபெரும் மொன்யூமென்ட் கட்டிடங்கள் இருந்தன. எகிப்து, இந்தியா, சுமேரியா மற்றும் சீன நாகரிகங்களுடன் ஒத்த காலகட்டத்தில் இது வளர்ந்ததாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன.
மர்மங்களைத் தீர்க்கும் புதிய வழிகாட்டி
இயற்கை பேரழிவுகள் காரணமாக காரல் நாகரிகம் அழிந்திருக்கலாம் என வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஆனால் இப்போது கண்டறியப்பட்டுள்ள பெனிகோ தொல்லியல் தளம், அந்த மர்மங்களை மீள விவரிக்க வழிகாட்டக்கூடியதாக அமையலாம் என நம்பப்படுகிறது.
தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஆய்வுகள், தெற்கு அமெரிக்காவின் தொன்மைநிலை நாகரிகங்களைப் பற்றிய புரிதலை விரிவுபடுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் பணி புரிந்து வருகின்றனர்.