அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “ஒத்த கருத்துகளைக் கொண்ட கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேரலாம்,” எனும் வகையில் அழைப்பு விடுத்தார். குறிப்பாக, இந்த அழைப்பு தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு என அவர் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், எடப்பாடி பழனிசாமியின் கூற்றுக்கு பதிலளித்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ், “தற்போது எங்கள் கட்சி எவருடனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. எங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்பதையே செயற்குழு முடிவாக அறிவித்துள்ளது,” என்றார்.
மேலும், “எடப்பாடி பழனிசாமி குழப்பமான மனநிலையுடன் செயல்படுகிறார். தன்னை பெரிய தலைவராகவும், பெரிய கூட்டணியை அமைக்கும் திறன் கொண்டவராகவும் காட்டுவதற்காகவே இவ்வாறு தவறான கருத்துகளை பரப்புகிறார்,” எனக் குற்றம்சாட்டினார்.
“அதிமுக-பாஜக கூட்டணி மக்களிடையே ஏற்கப்படாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதே காரணமாக, பெரும்பான்மைக் கட்சிகள் தங்களை நோக்கி வருவதாக பொய் உருவாக்கப்படுகிறதென்று” அருண்ராஜ் விமர்சித்தார்.