அரங்கக்குடி ஜமாத்தில் இருந்து ஊர்விலக்கம் செய்யப்பட்ட இஸ்லாமியர் மயிலாடுதுறை எஸ்.பி. அலுவலகத்தில் புகார்:- ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றச்சாட்டு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அரங்கக்குடி கிராமத்தை சேர்ந்தவர் நூருல்அமீன். இவர் அரங்கக்குடி ஜமாத்தில் இருந்து தன்னை ஊர்விலக்கம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து, அவர் கூறுகையில், அரங்கக்குடியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் 800 உறுப்பினர்கள் உள்ளனர். இப்பள்ளிவாசலின் முத்தவல்லியாக அர்சத் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் முத்தவல்லியாக பொறுப்பேற்ற நாளில் இருந்து எனக்கு திருமண மற்றும் அனைத்து வைபவங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. மேலும் ரமலான் போன்ற வைபவங்களுக்கு உரிய சீரணி சோறு, கஞ்சி அட்டை வழங்கவில்லை. இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திடமும் புகார் அளித்திருந்தேன். இதனால் விரோதம் கொண்ட முத்தவல்லி அர்சத் மற்றும் அவரது ஆட்கள் கடந்த 22-ஆம் தேதி பள்ளிவாசல் தெருவில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து அறிவுரைகள் கேட்பதற்காக அமர்ந்து இருந்தபோது முத்தவல்லி அர்சகத் மற்றும் எங்கள் ஊரைச் சேர்ந்த சம்சுதீன், அப்துல் மஜீத், முகமது பைஜி, முகமது ரியாத் ஆகியோர் முத்தவல்லி மற்றும் ஜமாத்தாரிடம் கணக்கு கேட்பாயா? என்று கூறி தாக்கி காயப்படுத்தினர். இதையடுத்து, நான் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வாக்குமூலம் பெற்று சென்றும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுக ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க செம்பனார்கோவில் போலீசார் மறுக்கின்றனர். திமுக பொதுக்குழு உறுப்பினர் அர்சத் உள்ளிட்டவர்களால் எனது உயிருக்கும், உடைமைக்கும் எந்நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். எனவே, அரங்கக்குடி ஜமாத்தில் நடந்துவரும் ஊர் விலக்கத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை பள்ளிவாசலில் வைத்து அடித்து காயம் ஏற்படுத்தி நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றார்.
பேட்டி: நூருல்அமீன் (புகார்தாரர்).
