மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி 1வது வார்டில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத சுடுகாடு உள்ளது. ஆயிரம் குடும்பத்தினர் பயன்படுத்தும் இந்த சுடுகாட்டில் உடலை தகனம் செய்ய வரும்பொது பொதுமக்கள் சுடுகாட்டை சரி செய்து உடலை எரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. சுடுகாடு பாதை இல்லாமல் திறந்தவெளியில் இருப்பதால் மழைக்காலங்களில் இறந்தவர் உடலை எரிப்பதற்கு பொதுமக்கள் ரூ. 15 ஆயிரம் முதல் செலவு செய்து தற்காலிக கொட்டகை அமைத்து தகனம் செய்கின்றனர். மேலும் இந்த பகுதியில் பல்வேறு தெருக்களில் நகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டுவதால் கடுமையான துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. சுடுகாட்டிற்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென்று பல்வேறு போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று மாப்படுகை கிராமத்தில் இறந்த மூதாட்டியை தகனம் செய்வதற்கு சேறும் சகதியமாக காடாக இருந்த சுடுகாட்டுப்பாதையை ஜேசிபி எந்திரம்’ கொண்டு சுத்தம் செய்து உடலை தகனம் செய்தனர். ஒவ்வொரு முறையும் உடலை தகனம் செய்ய சுடுகாட்டை ரூபாய் 15 ஆயிரம் வரை செலவு செய்து சீரமைக்க வேண்டிய அவலநிலை உள்ளதால் சுடுகாட்டிற்கு நிரந்தர பாதை ஏற்படுத்தி மயான கொட்டகை அமைத்து அனைத்து வசதிகளும் செய்தி தர வேண்டும் நகராட்சி குப்பைகளை சுடுகாட்டு பகுதியில் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பலமுறை போராட்டம் நடத்தியும் சுடுகாட்டிற்கு அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
