நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஜூலை 21ஆம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில், கடந்த ஐந்து நாட்களாக அவையின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் உள்ளேயும் வெளியேயும் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
மத்திய அரசு, ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பாக விவாதத்திற்கு தயாராக இருப்பதாக தெரிவித்த நிலையில் கூட, அவை நடவடிக்கைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வந்தன.
இந்த சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை சீராக நடத்தும் நோக்கில் சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்துக் கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்தார். கூட்டத்தின் போது, கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், “பார்லிமென்ட் விதிகளை கடைபிடிக்க வேண்டும்; பிரச்சனைகளுக்கு விவாதம் மற்றும் பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு கிடைக்கும்” என தெரிவித்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று, அனைத்து கட்சிகளும் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒப்புதல் தெரிவித்துள்ளன. இதனடிப்படையில், திங்கட்கிழமை முதல் நாடாளுமன்ற நடவடிக்கைகள் வழக்கப்படி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.