கரூர் தவெக கூட்டத்தில் காயமடைந்த 53 பேரும் டிஸ்சார்ஜ் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் காயமடைந்த 53 பேரும் முழுமையாக குணமடைந்து இன்று மாலை வீடு திரும்புவார்கள் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் உலக முதியோர் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், அந்த மையம் தொடங்கியதிலிருந்து ஒரு ஆண்டில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், 500 கோடி ரூபாய் மதிப்பில் சிறுவர் மருத்துவமனை உருவாக்கும் திட்டம் விரைவில் துவங்கும் என்றும் அறிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

கிண்டி தேசிய முதியோர் மையத்தில் இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளி சிகிச்சை பெற்றுள்ளனர்.

முதியோருக்கான சிகிச்சை வசதிகள் அதிகரிக்கப்பட்டதால், தமிழகத்தில் மூத்த குடிமக்கள் விகிதம் 13.7 சதவீதமாக உள்ளது.

செஸ், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகள், பொழுதுபோக்கு ஏற்பாடுகள், இலவச நிமோனியா தடுப்பூசி போன்ற வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

கரூர் நிகழ்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்த சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர், 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். தற்போது அனுமதிக்கப்பட்டிருந்த 53 பேரும் குணமடைந்து இன்று வீடு திரும்புகிறார்கள்” என்றார்.

அதேவேளை, கரூர் சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை தேவை என்ற கோரிக்கை சிலரிடம்தான் வந்துள்ளதாகவும், தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டு வருவதாக பல கட்சி தலைவர்களும் பாராட்டியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version