ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்- திரளான பக்தர்கள் தரிசனம்

ஆக்கூரில் இன்று கோலாகலமாக நடந்த தான்தோன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் கிராமத்தில் வாள்நெடுங் கண்ணியம்மன் சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோவில் கோசெங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோவில்களில் ஒன்றாகும். சிறப்புலி நாயனார் அவதரித்து முக்தி பெற்ற ஸ்தலமாகும். குறுநில மன்னன் ஒருவன் ஆயிரம் அடியார்களுக்கு அளித்த அன்னதானத்தில் இத்தலத்தின் இறைவன் ஆயிரத்தில் ஒருவராக வந்து அன்னம் உண்டு காட்சியளித்த பெருமைமிகு இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 1ம் தேதி முதல் கால பூஜைகள் தொடங்கியது. இன்று காலை 6ம் கால யாகச் சாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மகா தீபாராதனை நடந்தது. யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத வைத்தியநாத சிவாச்சாரியார் தலைமையிலானோர் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளில் சன்னதி விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அறங்காவலர் குழு தலைவர் பாஸ்கரன், செயல் அலுவலர் உமேஷ் குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். செம்பனார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

Exit mobile version