அஜித் குமார் மரணம் : தமிழக முழுவதும் போலீஸ் தனிப்படைகள் கலைப்பு – டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவு

திருப்புவனத்தில் போலீசாரின் விசாரணையின் போது உயிரிழந்த அஜித் குமார் விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக, தமிழகமெங்கும் மாவட்டங்களிலும் மாநகரங்களிலும் செயல்பட்டு வந்த அனைத்து தனிப்படை போலீசுகளையும் உடனடியாக கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

மரணம் வரைச்செல்லும் விசாரணை :
நகை திருட்டு புகாரின் பேரில் திருப்புவனத்தைச் சேர்ந்த வாலிபர் அஜித் குமார் போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார். விசாரணையின் போது அவர் கடுமையாக தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, அதே தாக்கத்தின் விளைவாக அவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தமிழக அரசுக்கு பெரும் தட்டுப்பாடாக மாறியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போலீசாரின் செயலை கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை :
சம்பவத்தையடுத்து, சிவகங்கை மாவட்ட எஸ்பி மாற்றப்பட்டார். மானாமதுரை டிஎஸ்பி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட போலீசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

தனிப்படைகள் மீது முழுமையான பரிசீலனை :
இந்த மரணத்திற்கு முக்கிய காரணம் போலீஸ் “தனிப்படை”யாக இருந்தது என விசாரணையில் தெரியவந்துள்ளது. பல இடங்களில், உயரதிகாரிகள் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் தனிப்படை போலீசார் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த அமைப்புகள், அதிகாரிகள் விருப்பப்படி செயல்பட்டு, அதிகாரபூர்வ கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாகவும், சிலர் பாதுகாப்புடன் சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

உடனடி கலைப்பு உத்தரவு :
இந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், மாநகரங்களிலும் செயல்பட்டு வந்த தனிப்படைகளை உடனடியாக கலைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக டிஜிபி அறிவித்துள்ளார். இனிமேல், குற்றச் சம்பவங்களுக்கேற்ப தனிப்படைகள் உருவாக்கப்படும் என்றும், அதற்கான உரிய அனுமதிகள் பெற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version