ஆமதாபாத் :
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் திடீரென விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்துள்ளனர்.
இந்த சம்பவம் மதியம் 1.17 மணியளவில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அது கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடம் முழுவதும் தீவிர மீட்பு மற்றும் தீயணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானம் விழுந்த இடத்தை கரும் புகைகள் சூழ்ந்துள்ளன. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
242 பயணிகளின் நிலை குறித்த முழுமையான தகவல் தற்போது வெளியாகவில்லை. உயிரிழப்பு, காயம் போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
சமூக வலைதளங்களில் விபத்து சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வேகமாக பரவி வருகின்றன. அதில் விமானம் தீப்பற்றியதையும், புகை மூடியதையும் காண முடிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. விமான பாதுகாப்பு அதிகாரிகள், ஏர் இந்தியா நிர்வாகம் மற்றும் அரசு தரப்பினர் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

















