மும்பையில் இருந்து சென்னைக்குத் திருப்பி விடப்பட்ட ஏர் இந்தியா விமானம், நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இதில் 154 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஜூன் 27 இரவு 11 மணிக்கு புறப்பட வேண்டிய AI-671 என்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், 148 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன், தாமதமாக நள்ளிரவு 12 மணிக்கு மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. விமானம் சென்னையை நோக்கி நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
இந்த கோளாறை கவனித்த விமானி, மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துடன் உடனடியாக தொடர்பு கொண்டு, விமானத்தை திருப்பி மீண்டும் மும்பைக்கு கொண்டு வந்து அவசரமாக தரையிறக்கினார்.
விமானப் பொறியாளர்கள் உடனடியாக பழுது பார்ப்பதில் ஈடுபட்டனர். எனினும், கோளாறு சிக்கலானதாக இருந்ததால், உடனடியாக சரி செய்ய முடியவில்லை. இதனையடுத்து, விமானத்தில் பயணித்த அனைவரும் விமானத்திலிருந்து கீழிறக்கப்பட்டு, ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
அதன் பின், மாற்று விமானம் மூலம் அனைத்து பயணிகளும் அதிகாலை 4.35 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்டு, காலை 6.05 மணிக்கு சென்னைக்கு பாதுகாப்பாக வந்தடைந்தனர்.
இயந்திரக் கோளாறால் இந்த விமானம் சுமார் 5 மணி நேர தாமதம் ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் சிரமங்களை சந்தித்த போதிலும், பெரியதொரு விபத்து தவிர்க்கப்பட்டது என்பது ஆறுதலாகும்.

















