திண்டுக்கல் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி கார்த்திகை விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்புப் பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த திரளான பக்தர்கள் முருகப்பெருமானை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

திருமலைக்கேணி கோவில் மலைமீது அமைந்திருப்பதாலும், இயற்கையான சூழலில் அமைந்துள்ளதாலும் முருகப் பெருமானுக்கு உகந்த கார்த்திகை மற்றும் சஷ்டி தினங்களில் இங்குப் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு, மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு அதிகாலையிலேயே பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து, சுவாமிக்கு வண்ண மலர்களால் செய்யப்பட்ட அழகிய சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தங்க கவசம் சாத்தப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் எழுப்பி பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர். அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளுக்குப் பிறகு, உற்சவ மூர்த்தி மலையைச் சுற்றியுள்ள உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மலைப்பாதையில் பக்தர்கள் புனித நீராடி, மொட்டை அடித்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள காமாட்சி மௌனகுருசாமி மடத்திலும் கார்த்திகையை ஒட்டிப் பக்தர்கள் விளக்கேற்றிச் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த மடத்திற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அமைதி தவழும் சூழலில் தியானம் செய்து செல்வது வழக்கம். திருமலைக்கேணி கோவிலைப் போலவே, நத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் கார்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும், குட்டூர் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் உள்ள முருகப்பெருமான் சன்னதியிலும், அங்காளம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட மற்ற அம்மன் கோவில்களில் உள்ள முருகப்பெருமான் சன்னதிகள் மற்றும்சிறு சிறு முருகன் கோவில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர். கார்த்திகை தினத்தை முன்னிட்டு பக்தர்களுக்குக் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Exit mobile version