ஆர்.எஸ்.எஸ், அதிமுகவை வழிநடத்தினால் என்ன தவறு எல்.முருகன் பேசி இருப்பது அதிமுக ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்று விட்டதை காட்டுகிறது. இதற்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் தான் பதில் சொல்ல வேண்டும்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கட்சி நிர்வாகியில் புதிய இல்ல திறப்பு நிகவில் கலந்துக்கொண்ட பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியா கூட்டணியின் சார்பில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக போட்டியிடுகிறார். நாடறிந்த மனித உரிமை ஆர்வலர், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளை பாதுகாக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர். சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் உறுதியாக இருப்பவர். அவரை குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன் அதிமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாஜக இந்த தேர்தலை வலிந்து நம் மீது திணித்திருக்கிறது. ஏற்கனவே குடியரசுத் துணைத் தலைவராக இருந்தவரை கட்டாயப்படுத்தி பதவி விலக செய்துள்ளனர். அவருடைய நிலை என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அவருடைய இல்லத்தை சுற்றி இராணுவ துருப்புகள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன என தெரிய வருகிறது. குடியரசு துணைத் தலைவருக்கே இப்படி ஒரு நெருக்கடி நம்முடைய நாட்டில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்புகளால் ஏற்பட்டிருக்கிறது என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தேர்தல் தமிழரா, தமிழர் அல்லாதவரா என்கிற அடிப்படையில் அணுகக் கூடிய ஒன்று அல்ல. அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்கு உரிய புரிதலும், துணிவும் உள்ள ஒருவர் தேவைப்படுகிறார். ஆகவே சுதர்சன் ரெட்டி அவர்களுக்கு ஜனநாயக சக்திகளாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறி விடக்கூடாது என்று வேண்டுகோள் விடுகிறோம்.
பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக ராகுல் காந்தி அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்க கூடியவையாக உள்ளன. பாஜக மற்றும் சங்க பரிவார அமைப்புகள் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி வாக்குத் திருடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை அம்பலப்படுத்தி இருக்கிறார் ராகுல் காந்தி. அதனை கண்டித்தும், எதிர்த்தும் இப்போது பீகாரில் ராகுல் காந்தி யாத்ரா பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவருடைய முன்னெடுப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் பிகருக்கு சென்றிருப்பதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். தமிழ்நாட்டிலும் வாக்குத்தரட்டு முயற்சியில் பாஜகவினர் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை யூகிக்க முடிகிறது. தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறப்பு தீவிர திருத்தம் என்கிற பெயரில் வாக்காளர் பட்டியலை அவர்கள் தங்களின் வெற்றிக்கு ஏதுவாக பயன்படுத்துகிறார்கள். தங்களுக்கு வாக்களிக்காதவர்களை பட்டியலிலிருந்து நீக்கவும், தங்களுக்கு வேண்டியவர்களை வெளி மாநிலங்களில் இருப்பவர்களை வாக்காளர் பட்டியல் இணைக்கவும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஜனநாயகத்தை படுகொலை செய்கிற மிக மோசமான ஒரு நடவடிக்கையாகும் இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
100 நாள் வேலை திட்டம் மெல்ல மெல்ல அருகி வருகிறது பாஜக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து இந்த திட்டத்தை முற்றாக அளிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 100 நாள் வேலை யாருக்குமே வழங்கப்படுவதில்லை. நெகிழியும் பாஜக அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. ஜனநாயக சக்திகள் 100 நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.
அதிமுகவினர் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்று விட்டார்கள் என்பதற்கு இந்த கேள்வியை ஒரு சான்றாகவுள்ளது. அதிமுகவை பெரியார் வழிவந்த திராவிட இயக்கம் என்று தான் தமிழ்நாடு நம்பி கொண்டுள்ளது. ஆனால் அந்த இயக்கத்தை கோல்வார்க்கர், வீரசாவர்க்கர் வழிவந்தவர்கள் வழி நடத்தலாம், அப்படி வழி நடத்தினால் ஒன்றும் தவறில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறி இருக்கிறது என்பதை கவலை அளிக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தவறா, தவறில்லையா என்பதை அதிமுக தலைவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும்.
நாடு முழுவதும் சாதி, மதத்தின் பெயரால் கலவரங்கள் நிகழ்வதற்கு ஆர்.எஸ்.எஸ்-சின் அடிப்படை கொள்கை தான் காரணம். இதனை தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்கள் வலிமை பெறுவதற்கு அதிமுக துணை போவது கவலை அளிக்கிறது. அதிமுகவை விழுங்குவதற்கு அந்த இயக்கம் பல யுக்திகளை கையாண்டு வருகிறது. இது அதிமுகவிற்கு மட்டுமே பாதிப்பு இல்லை, தமிழ்நாட்டுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக அதிமுகவினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பரப்புகிற ஒரு இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் பாஜக இருப்பது வேதனையாக உள்ளது. அதனை பின்பற்றி தான் மத்திய விவசாயத்துறை அமைச்சர் பேசியிருக்கிறார் என்று கருதுகிறேன். அறிவியலுக்கு முரணான கருத்துக்களை பரப்புவது மக்கள் விரோத நடவடிக்கை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதிமுக, பாஜக, பாமக இணைந்து ஏற்கனவே தேர்தலை சந்தித்துள்ளன. அவர்களின் வாக்கு பலம் என்ன என்பது தேர்தலில் வெளிப்பட்டுள்ளது. எனவே அந்த கூட்டணியால் வெற்றிகரமாக இயங்க முடியவில்லை. ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த கூட்டணியில் பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம் பெறவில்லை. அந்த கூட்டணியில் சேர்வதற்கு யாரும் தயாராக இல்லை. அதிமுகவும், பாஜகவும் மட்டுமே இணைந்துள்ளன. இந்த நிலையில் அவர்கள் 39 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சி அமைப்பது என்பது தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரு முயற்சியாக இருக்கலாம் அல்லது ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் செய்த தில்லு, முல்லு வேலைகளை இங்கே செய்ய முடியும் என்று நம்பி இந்த கருத்தை சொல்லி இருக்கலாம்.