கொங்கு மண்டலத்தில் அதிமுக வலிமை… கோவையில் மெட்ரோ வரக் கூடாதென திமுக – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

நெல்லை: கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து திமுக அரசு முறையாக தகவல்கள் வழங்காததால், மத்திய அரசு திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

நெல்லை வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை; மாறாக மாநில அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கையில் முக்கிய தகவல்கள் குறைவாக இருப்பதை காரணமாகக் கொண்டு மத்திய அரசு திருத்தத்திற்காக திருப்பி அனுப்பியுள்ளது. கோவைக்கு மெட்ரோ ரயில் வரக் கூடாதென திமுக திட்டமிட்ட அரசியல் நோக்கத்துடன் DPR தயார் செய்யப்பட்டதாகவே தெரிகிறது என்று அவர் கூறினார்.

கொங்கு மண்டலம் அதிமுக வலுவாக இருப்பதால் திட்டமே நிராகரிக்கப்படும் வகையில் அறிக்கை அனுப்பியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். மெட்ரோ நிலையங்களுக்கு தேவையான நிலம் குறித்து மாநில அரசு தெளிவான உறுதி அளிக்காததே பெரிய குறைபாடாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கோவை ரயில் நிலையம்–பேருந்து நிலையம் இடையேயான தூர அளவைச் சம்பந்தமாகவும் தேவையான தகவல்கள் முறையாக வழங்கப்படாததாக அவர் கூறினார். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தபோது திமுக அரசு திட்ட நிராகரிப்பு குறித்த தவறான விளக்கங்களைக் கொடுத்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது அரசியல் நாடகம் மட்டுமே என நயினார் விமர்சித்தார்.

பின்னர், தனது ‘X’ பக்கத்திலும் அவர் திட்ட அறிக்கையிலான குறைகள் குறித்து விரிவாக பதிவிட்டார்.

கோவை மெட்ரோவுக்கான DPR-இல், தற்போதைய பயண நேரத்துடன் ஒப்பிடும்போது மெட்ரோ மூலம் சரியான நேரச் சேமிப்பு கிடைப்பதாக காட்டப்படவில்லை.

2011 மக்கள்தொகை கணக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது; 2025 கணிப்பிடப்பட்ட மக்கள்தொகை சேர்க்கப்படாதது பெரிய தவறு.

மதுரை நகரின் Comprehensive Mobility Plan-ல் தற்போதைய பயணிகள் எண்ணிக்கைக்கு BRTS போதுமானது என மாநில அரசு தானே குறிப்பிடியுள்ளது.

கோவையில் முன்மொழியப்பட்ட மெட்ரோ பாதைகளால் பொதுமக்களின் சொத்துகள் அதிக அளவில் இடிக்கப்பட வேண்டிய சூழல் உருவாகும் என DPR-இலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

“மொத்தத்தில் திமுக அரசு தயாரித்த DPR-ல் மிகுந்த பிழைகள் உள்ளன; மேலும் மெட்ரோ திட்டத்தின் தேவையை நியாயப்படுத்தத் தேவையான விவரங்களும் குறிப்பிடப்படவில்லை,” என அவர் குற்றம்சாட்டினார்.

மெட்ரோ திட்டத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் திமுக அரசு நிறுத்த வேண்டும் என்றும் நல்லாட்சிக்கான பொறுப்புடன் நடக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Exit mobile version