தேனி அருகே செட்டிபட்டி பகுதியில் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், தெற்கு மாவட்ட செயலாளர் மதுரை வீரன் ஆகியோர் தலைமையேற்றனர். தேனி வடக்கு மாவட்ட தலைவர் தீப்பொறி அரசு, தெற்கு மாவட்ட தலைவர் ஜெகதீஷ் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கழக தலைவர் நாகராஜன் அறிவித்ததன் அடிப்படையில், அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற அனைத்து வகையான ஆதரவும் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், என்.ஆர்.டி. நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இதுவரை வீடுகளுக்கான பட்டா வழங்கப்படாத நிலையில், உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு பட்டா வழங்கப்படவில்லை என்றால் வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்த கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக நிர்வாகிகள், மேற்கண்ட தீர்மானங்கள் குறித்து விளக்கி தெரிவித்ததுடன், 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்றும், பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டப் பாதையை தேர்வு செய்ய நேரிடும் என்றும் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, தெற்கு மாவட்ட தலைவராக ஜெகதீஷ் குமார், தெற்கு மாவட்ட துணை செயலாளராக பார்த்திபன், பழனிசெட்டிபட்டி பேரூர் கிளை செயலாளராக நவநீதன், போடி நகர செயலாளராக பாலமுருகன், போடி நகர துணை செயலாளராக நாகராஜ், போடி ஒன்றிய செயலாளராக மணிமாறன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.இந்த கூட்டத்திற்கு தேனி மாவட்ட அமைப்பாளர் தேவதாஸ் வரவேற்புரை ஆற்றினார். இறுதியாக, தேனி வடக்கு நகர செயலாளர் தென்னரசு நன்றி கூறினார்.















