தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில், ரேஷன் கடைகளில் நிலவும் கடுமையான பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விருதுநகரில் நடைபெற்ற அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கக் கூட்டத்தில் பேசிய அதன் மாநிலத் தலைவர் கோ.ஜெயச்சந்திரராஜா, ரேஷன் கடைகளில் எடையாளர்கள் பணியிடங்கள் பெருமளவில் காலியாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஆயிரக்கணக்கான கார்டுகள் உள்ள நகர்ப்புறக் கடைகளில் ஒரு எடையாளர் வீதம் நியமிக்கப்பட வேண்டும் என்ற அரசின் சுற்றறிக்கை வெறும் காகித அளவிலேயே இருப்பதாகவும், கூடுதல் எடையாளர்களை நியமிக்காமல் பொங்கல் பரிசு விநியோகத்தைச் சுமூகமாக நடத்துவது கடினம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ரேஷன் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்துப் பேசிய அவர், 12-ஆம் வகுப்பு கல்வித் தகுதியுள்ள விற்பனையாளர்களுக்கு, 8-ஆம் வகுப்பு தகுதியுள்ள அலுவலக உதவியாளர்களுக்கு இணையான சம்பளம் கூட வழங்கப்படுவதில்லை என வேதனை தெரிவித்தார். இவர்களுக்கு இளநிலை உதவியாளர் அல்லது வி.ஏ.ஓ (VAO) தரத்திற்கு இணையான ஊதியமும், எடையாளர்களுக்கு அலுவலக உதவியாளர் சம்பளமும் வழங்கப்பட வேண்டும். மேலும், மாநகராட்சி மற்றும் நகரப் படிகளுடன், வீட்டு வாடகை படியும் முறையாக வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, தற்போது பயன்பாட்டில் உள்ள புளூ-டூத் தராசுகள் கணக்கீட்டின் போது எடையைக் குறைவாகக் காட்டுவதால், பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படுவதைச் சரிசெய்ய நவீனத் தொழில்நுட்ப மேம்பாடு அவசியம் என வலியுறுத்தினார்.
பொங்கல் பரிசு விநியோகத்திற்காக வழங்கப்படும் கமிஷன் தொகை குறித்துப் பேசிய ஜெயச்சந்திரராஜா, “1988-ஆம் ஆண்டின் சுற்றறிக்கைப் படி ஒரு கார்டுக்கு 50 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது. இன்றைய விலைவாசியில் இது மிகவும் குறைவு; எனவே சிறப்புச் செயலாக்கம் அடிப்படையில் ஒரு கார்டுக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும்” எனக் கோரினார். மேலும், ஊழியர்களின் இடமாற்ற நடைமுறைகளை எளிமையாக்கி கூட்டுறவு இணைப்பதிவாளர்களே முடிவு செய்யும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். பல தசாப்தங்களாகக் கடைகளில் அடிப்படை வசதியான கழிப்பறைகள் கூட இல்லாத அவல நிலை நீடிப்பதாகவும், பழைய கடைகளிலும் உடனடியாகக் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பதவிக்கால அடிப்படையில் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை அந்தஸ்து வழங்குவதோடு, ஓய்வூதியத் திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், ஒருவேளை உரியப் பலன் கிடைக்காவிடில் அடுத்தகட்டமாகப் பணிகளைப் புறக்கணிப்பது உள்ளிட்ட தீவிரப் போராட்டங்களில் ஈடுபட நேரிடும் எனவும் சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

















