தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் கால் வைக்கிறார்.
90களில் பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்த ரோஜா, தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தார். பின்னர் 1998ம் ஆண்டிலிருந்து அரசியலில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த அவர், 2013க்குப் பிறகு முழுமையாக சினிமாவிலிருந்து விலகினார்.
இப்போது, பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெனின் பாண்டியன்’ என்ற படத்தின் மூலம் ரோஜா மீண்டும் திரையுலகில் களமிறங்குகிறார். இதில் அவர் ‘சந்தானம்’ என்ற முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடைசியாக அவர் நடித்த ‘கில்லாடி’, ‘புலன் விசாரணை 2’, ‘என் வழி தனி வழி’ போன்ற படங்கள் 2015ல் வெளியானது. அதன் பின்னர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தோன்றியிருந்தாலும், சினிமாவில் நடிப்பைத் தவிர்த்திருந்தார்.
இப்படத்தில் இசையமைப்பாளர்-இயக்குனர் கங்கை அமரனும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். அவர் ‘துரைராசு’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். ரோஜா நடித்திருக்கும் கதாப்பாத்திரத்தின் வீடியோவை நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஜா திரையுலகில் மீண்டும் வருவது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
