எர்ணாகுளம்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஐடி ஊழியர் ஒருவரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மலையாளத்தில் அறிமுகமான லட்சுமி மேனன், தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி, கொம்பன், வேதாளம் போன்ற படங்களில் நடித்தவர். சில ஆண்டுகளாக சினிமா வாய்ப்புகள் குறைந்து கேரளாவிலேயே தங்கியிருந்த நிலையில், தற்போது கடத்தல் வழக்கில் சிக்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பார் தகராறில் தொடங்கிய பிரச்சினை
சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின்படி, நடிகை லட்சுமி மேனன் தனது நண்பர்கள் மிதுன், அனீஷ் ஆகியோருடன் சமீபத்தில் எர்ணாகுளம் பகுதியிலுள்ள மதுபான பாருக்கு சென்றுள்ளார். அங்கு வந்திருந்த மற்றொரு குழுவினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பார் மூடிய பின், இரு தரப்பினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது. அதில், எதிர் தரப்பைச் சேர்ந்த காரை பின்தொடர்ந்த லட்சுமி மேனனின் நண்பர்கள், அதில் இருந்த ஐடி ஊழியர் ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்று தாக்கியுள்ளனர். கடுமையாக காயமடைந்த அந்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வழக்குப் பதிவு – நண்பர்கள் கைது
புகாரின்பேரில் எர்ணாகுளம் வடக்கு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை தொடங்கினர். இதில் லட்சுமி மேனனின் நண்பர்களான மிதுன், அனீஷ், சோனாமோல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லட்சுமி மேனன் மீது போலீசாரின் கவனம்
ஐடி ஊழியரை கடத்திச் செல்லும் போது நடிகை லட்சுமி மேனனும் உடன் இருந்ததாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரையும் விசாரணைக்கு அழைக்க திட்டமிட்ட போலீசார், தற்போது அவர் மொபைல் போனை அணைத்து விட்டு தலைமறைவாகியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
விரைவில் லட்சுமி மேனன் கைது செய்யப்படலாம் எனவும், இந்த சம்பவம் திரைத்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.