நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்தார் – பிக் பாஸ் நமீதாவும் பாஜகவில் சேர்வு

தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி இன்று பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.

‘ஆத்தா உன் கோவிலிலே’ திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான கஸ்தூரி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 51 வயதான இவர், சமூகப் பிரச்சினைகளில் தொடர்ந்து தனது குரலை பதிவு செய்து வருபவர். எந்த அரசியல் கட்சிகளையும் சாராமல், சமூக வலைதளங்களின் மூலம் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து திறந்த மனத்துடன் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் பல வழக்குகளையும் எதிர்கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன், சென்னை நிகழ்ச்சியில் பேசிய கருத்துக்காக, ஐதராபாத் போலீசார் அவரை கைது செய்த சம்பவமும் நடைபெற்றது.

இந்நிலையில், சென்னை பாஜக மாநிலத் தலைமையகம் ‘கமலாலயம்’ வளாகத்தில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் கஸ்தூரி இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சமூக செயற்பாட்டாளர் நமீதா மாரிமுத்துவும் பாஜகவில் இணைந்தார்.

இருவரையும் வரவேற்ற நயினார் நாகேந்திரன், “அவர்கள் இருவரும் பாஜகவின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version