ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் 1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை தேவயாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பள்ளி மாணவர்கள் வழங்கிய கலை நிகழ்ச்சிகளை அவர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தார்.

மாணவர்களை நோக்கி பேசிய தேவயாணி, தன்னம்பிக்கையே வெற்றிக்கான தாரக மந்திரம் என்றும், வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒன்றை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது நீண்ட திரையுலகப் பயணத்தில் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் குறித்து பேசினார். “வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் ஏதோ ஒன்றை கற்றுக்கொண்டே இருக்கிறோம். நான் எப்போதும் கற்றுக்கொள்ளும் ஒரு மாணவியாகவே இருக்க விரும்புகிறேன். அதுதான் நம்மை தொடர்ந்து மெருகேற்றிக் கொள்ள உதவும்” என அவர் தெரிவித்தார்.

சூர்யவம்சம், காதல் கோட்டை, மறுமலர்ச்சி போன்ற தாம் நடித்த பழைய திரைப்படங்கள் இன்றளவும் தொலைக்காட்சிகளில் ரசிகர்களால் ரசிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்காக தான் அதிர்ஷ்டசாலி என நெகிழ்ச்சியுடன் பதிலளித்தார். திரையுலகில் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தது கடவுளின் கருணை என்றும், கமலி, நந்தினி போன்ற கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பதற்கு நல்ல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களே காரணம் என்றும் அவர் கூறினார். மேலும், இன்றும் அதே ஆர்வத்துடன் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இன்றைய தலைமுறைக்கு வழங்கும் அறிவுரை குறித்து பேசிய தேவயாணி, மாணவ மாணவிகள் எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது என்றும், எதையும் மறைக்காமல் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் மனம் திறந்து பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இன்றைய குழந்தைகள் செல்போன் மற்றும் வீடியோ கேம்களில் அதிக நேரத்தை செலவிடுவது கவலை அளிப்பதாக குறிப்பிட்ட அவர், புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை வாசிப்பதை மாணவர்கள் மீண்டும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து தனது அடுத்த கட்ட சினிமா பணிகள் குறித்து பேசிய நடிகை தேவயாணி, சமீபத்தில் ‘3 BHK’ மற்றும் ‘நிழற்குடை’ திரைப்படங்களில் நடித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜீனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும், அந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர் உற்சாகத்துடன் கூறினார்.

Exit mobile version