சென்னை : பிரபல நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி பிரபலமான நடுவருமான ரோபோ சங்கர் (49) நேற்று இரவு காலமானார். உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரின் மறைவுச் செய்தி வெளியாகியவுடன், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
ரோபோ சங்கரின் உடலைப் பார்வையிட பல நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேடைக் கலைஞராக தொடக்கம்
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சங்கர், தனது கலை வாழ்க்கையை ஸ்டாண்ட் அப் காமெடி, மிமிக்ரி மற்றும் மேடைக் கலைஞராக தொடங்கினார். மேடைகளில் அவர் போட்ட “ரோபோ” வேடம், பின்னாளில் அவருக்கே அடையாளமாகி “ரோபோ சங்கர்” என்ற பெயரை நிலைநிறுத்தியது.
சினிமா பயணம்
1990களின் இறுதியில் சினிமாவுக்குள் நுழைந்தபோதும், ஆரம்பத்தில் சிறு வாய்ப்புகளையே பெற்றார். 2007ஆம் ஆண்டு வெளியான “தீபாவளி” படத்தில் சிறு கதாபாத்திரம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
2013ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தில் “சவுண்ட் சுதாகர்” கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார். அதன் பின்னர், தனுஷின் “மாரி” படத்தில் நடித்த “சனிக்கிழமை” கதாபாத்திரம் அவருக்கு பெரிய வரவேற்பைத் தந்தது.
பின்னர் விஜய்யின் “புலி”, அஜித்தின் “விஸ்வாசம்”, சிவகார்த்திகேயனின் “வேலைக்காரன்” உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தார். ரெய்மிங் டைமிங்கில் நகைச்சுவைச் செய்யும் திறமையால், ரசிகர்களிடம் தனித்துவமான இடத்தைப் பிடித்தார்.
டப்பிங் கலைஞராகவும் திறமை
நடிகராக மட்டுமின்றி, டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கினார். உலகளவில் பிரபலமான “தி லயன் கிங்” அனிமேஷன் திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் “பும்பா” கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தார்.
உடல்நிலை மற்றும் மறைவு
சமீப ஆண்டுகளில் மஞ்சள்காமாலை காரணமாக சிகிச்சை பெற்ற ரோபோ சங்கர், உடல்நலத்தில் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு உயிரிழந்தார்.
திரையுலகின் அஞ்சலி
கிடைக்கும் இடங்களில் சிரிப்பை பரப்பிய ரோபோ சங்கரின் மறைவு, ரசிகர்களுக்கும், சக நடிகர்களுக்கும் பெரிய இழப்பாக அமைந்துள்ளது. “நம்மைச் சிரிக்க வைத்தவர், இப்போது சத்தமின்றி படுத்திருக்கிறார்” என்ற துயரத்தில், முழு தமிழ் திரையுலகமே மூழ்கியுள்ளது.
