58-வது வயதில் மூன்றாவது டிகிரி பெற்ற நடிகர் முத்துக்காளை !

திரையுலகில் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி இடம் பிடித்த முத்துக்காளை, தற்போது 58வது வயதில் மூன்றாவது கல்வி பட்டத்தை பெற்று அனைவரையும் ஆச்சரியப்படச் செய்துள்ளார். ஒரு காலத்தில் குடிபழக்கத்துக்கு அடிமையான இவர், தன்னுடைய வாழ்க்கையை திருப்பமுடித்துக் கொண்டு, கல்வியிலும் சாதனை படைத்து இளம் தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளார்.

இளமையில் கல்விக்காக வாய்ப்பு இல்லாத நிலையில், திரைப்பட ஆசையுடன் சென்னை வந்த முத்துக்காளை, கராத்தே பயிற்சி பெற்றார். 18-வது வயதில் பிளாக் பெல்ட் வாங்கியதும், ஸ்டண்ட் மாஸ்டராக திரைத்துறையில் காலடி வைத்ததும், அவரை கல்வியிலிருந்து விலக்கி வைத்தது. பின்னர், நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானார்.

அனாலும், குடிப்பழக்கத்தால் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில ஆண்டுகள் இந்த பழக்கத்துக்கு அடிமையாக இருந்த அவர், பின்னர் அதிலிருந்து மீண்டு, கல்வியின் மீது கவனம் செலுத்தத் தொடங்கினார். தனது கனவை திரும்பத் துரத்திய முத்துக்காளை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை படித்து முடித்தார்.

2017-ல் வரலாறு துறையில் இளங்கலை பட்டம்

2019-ல் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம்

2025-ல் (தற்போது) தமிழ் இலக்கியத்தில் இன்னொரு இளங்கலை பட்டம் (முதல் வகுப்பில் தேர்ச்சி)

இது குறித்து அவர் கூறியதாவது:

“குடிப்பழக்கத்திலிருந்து மீண்டதும், கல்வியே எனது வாழ்க்கையை மீட்ட முக்கிய கருவி. இளம் வயதில் மாணவர்கள் படிக்க வேண்டிய நேரத்தில் படிக்க வேண்டும். கல்வி என்பது தனக்கே அல்ல, குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் வழிகாட்டும் ஒளியாக இருக்கும்.”

தனது வாழ்வில் தன்னைத்தானே மாற்றி, மாறுபட்ட துறைகளில் சாதித்து வரும் முத்துக்காளை, கல்வியின் அவசியத்தை உணர்த்தும் ஒருவர் என்ற வகையில் தற்போது இளைஞர்களுக்கு முக்கிய உந்துதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version