கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களின் பேரில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் துயர சம்பவம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது:
“கரூர் நிகழ்வை ஒட்டி உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழக அரசு மிகுந்த தீவிரத்துடன் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது.
கரூரில் நிகழ்ந்த இந்த துயரச்சம்பவம் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது. தம் அன்புக்குரியோரை இழந்து வேதனைப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் துயரத்தையும் ஆழமாக உணர்கிறேன். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விசாரணையின் மூலம் சம்பவத்தின் முழு உண்மை வெளிக்கொணரப்படும் எனவும், அனைத்து மட்டங்களிலும் பொறுப்பை உறுதி செய்வோம் எனவும் மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
தமிழகம் பல துறைகளில் இந்தியாவுக்கே முன்னோடியான மாநிலமாக திகழ்கிறது. கூட்ட நெரிசல் போன்ற விபத்துகளைத் தவிர்ப்பதிலும் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமையும் வகையில், அரசியல் கட்சிகள், வல்லுநர்கள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோருடன் ஆலோசித்து ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உள்ளோம்.
இது தமிழகத்துக்கே அல்லாது, முழு இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக அமையும். இத்துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்குடன் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல், நீண்டகால தீர்வை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது. இனி இத்தகைய பெருந்துயரம் தமிழகத்திலும் இந்தியாவிலும் எங்கும் நிகழாதவாறு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.