கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை

மயிலாடுதுறை அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து ஊர் நீக்கம் செய்து தங்கள் இடத்தில் தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமத்தில் படைவெட்டி மாரியம்மன் கோயில் உள்ளது. கோயில் அருகில் சங்கர் என்பவர் 3 சகோதரர்களோடு கஞ்சாநகரம் மத தர்ம பரிபாலன டிரஸ்ட்க்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கோயில் இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கிராமத்தினர் குற்றம் சாட்டியதால் இரண்டு தரப்பிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு சங்கர் தரப்பினர் வழக்கு தொடுத்து இடம் தனக்கு சொந்தம் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றுள்ளனர்.
இந்நிலையில் படைவெட்டி மாரியம்மன் கோவிலில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தீமிதி திருவிழாவை கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் கிராமத்தினர் மீண்டும் நடத்தி வருகின்றனர். தீமிதி திருவிழாவின்போது சங்கர் குடும்பத்தினரின் இடத்தில் உள்ள மரங்களை வெட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்தது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக சங்கர் தரப்பினர் குற்றம் சாட்டினர். அரசு மனைவரி தோராய பட்டா பெற்ற இடத்துடன் கோயிலின் இதர இடங்களையும் சங்கர் தரப்பினர் ஆக்ரமித்து வைத்துக்கொண்டு மரம் வளர்த்து சொந்தம் கொண்டாடுவதாக கிராமத்தினர் குற்றம்சாட்டினர். இந்த பிரச்னை தொடர்பாக சங்கர் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக அளித்த புகார் மீது கிராம நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் சேர்ந்து திருவிழாவை பிரச்னை இல்லாமல் நடத்தி நீதிமன்றம் வாயிலாக நிவாரணம் பெற தரங்கம்பாடி வட்டாட்சியரால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கஞ்சாநகரம் படைவெட்டி மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவம் நாளை காப்புக் கட்டுதலுடன் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் கிராம நிர்வாகிகள் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், தீமிதி திருவிழாவிற்கு கோயிலுக்கான வரி வாங்கவில்லை என்றும் தீமிதிக்கான தீக்குழியை தங்கள் சொந்த இடத்தில் அமைக்க முயற்சி செய்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் தங்களை பல ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள கிராமத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சங்கர் தரப்பை சேர்ந்த குடும்பத்தினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version