திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகர் பகுதியில், சாலையின் இரு புறங்களிலும் அதிக அளவில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் காரணமாக அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. இன்று காலை, நத்தம் நோக்கி செல்லும் சாலையில் மீனாட்சிபுரம் அருகே, வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியில் மினி வேன் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, நத்தம் காமராஜ் நகரை சேர்ந்த ராஜா மகன் செல்வகுமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த ராஜஸ்தான் மாநில பதிவு எண் கொண்ட லாரி அதிவேகமாக வந்து, செல்வகுமாரின் பைக் மற்றும் பின்னால் வந்த கணவன் மனைவி குழந்தைகளுடன் வந்த இரு சக்கர வாகனங்களை மோதியது. செல்வகுமார் மினி வேனுக்கும் லாரிக்கும் இடையே சிக்கிக் கொண்டார். அதிர்ஷ்டவசமாக, அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார், மற்ற இருசக்கர வாகனத்தில் இருந்த குடும்பமும் காயமின்றி உயிர் தப்பினர். செல்வகுமாரின் இரு சக்கர வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பிச் சென்ற நிகழ்வு, சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நத்தம் நகர் பகுதியில், அம்மன் குளம் முதல் தாலுகா அலுவலகம் வரையிலும் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அதிகமாக நிறுத்தப்படுவதால், இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதை ஆகிவருகிறது.
