ஜெனீவா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில், இந்தியாவின் அபிஷேக் சர்மா டி20 பேட்டிங்கில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம், இதுவரை முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்.
6 மாதங்களாக இந்தியா டி20 விளையாடவில்லை என்றாலும், அபிஷேக் சர்மா கடந்த ஆண்டு ஜூலை முதல் ஐநாடுகளுக்கு எதிராக 17 போட்டிகளில் விளையாடி 535 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்கள், ஒரு அரைசதமும் அடங்கும். கடைசி டி20 தொடரில் அவர் 279 ரன்கள் குவித்து, 219.69 ஸ்ட்ரைக் ரேட்டும், 55.80 சராசரியையும் பதிவு செய்தார்.
அவரது சக்திவாய்ந்த ஆட்டமும், தொடர் பங்களிப்பும் காரணமாக தற்போது அவர் 829 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். டிராவிஸ் ஹெட் 814 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றுள்ளார். ஹெட் கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு எந்த டி20 போட்டிகளிலும் விளையாடவில்லை என்பதாலும், புள்ளிகள் இழப்பால் தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பிற தரவரிசை மாற்றங்கள் :
டெஸ்ட் ஆல்ரவுண்டர்களில் ஜடேஜா முதலிடத்தில் தொடர்ந்தாலும், வாஷிங்டன் சுந்தர் சதம் மற்றும் 2 விக்கெட்டுகளுடன் 8 இடங்கள் முன்னேறி 14ஆம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ஜடேஜா 14வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அடுத்த டி20 தொடர்கள் :
ஆஸ்திரேலியா அணி ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் டிராவிஸ் ஹெட் மீண்டும் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது. இந்தியா அடுத்ததாக செப்டம்பர் 9 முதல் UAE-வில் நடைபெறும் 2025 ஆசியக் கோப்பை டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.