ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரிக்கரையில் தர்ப்பண வழிபாடு!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரிக்கரையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இன்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

அமாவாசை தினத்தில் விரதம் இருந்து தர்ப்பணம் செய்தால், நம் பாவங்கள் மட்டுமன்றி, முன்னோர்களின் தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதையடுத்து, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பலர், ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் வாழையிலை, பச்சரிசி, தேங்காய், பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வந்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பின்னர் அவற்றை ஆற்றில் விடுவதைக் கடைபிடித்தனர்.

பின்னர் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, அருகிலுள்ள காவிரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். மக்கள் அதிக அளவில் திரண்டதால், முதலைப்பண்ணை பகுதியில் போலீசார் கடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல், அரூர் அருகேயுள்ள தீர்த்தமலைக்கு பக்தர்கள் பெருமளவில் வந்து தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் புனித நீராடினர். ராமர், கவுரி உள்ளிட்ட ஐந்து தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையிலும், டி.அம்மாபேட்டை மற்றும் இருமத்தார் பகுதிகளில் தர்ப்பண வழிபாடுகள் நடைபெற்றன. பொதுமக்கள் ஆற்றின் கரையில் பூஜை செய்து, முன்னோர்களுக்கு சமர்ப்பித்த பூஜை பொருட்களை ஆற்றில் விட்டனர்.

Exit mobile version